இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வடிவத்துக்கும் ஒரே தலைவர்
இலங்கையின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரான சரித் அசலங்க (Charith Asalanka), இருபதுக்கு20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருபதுக்கு20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியதைத் தொடர்ந்தும், ஒருநாள் அணியில் குசல் மெண்டிஸின் தலைமைத்துவம் தோல்வியடைந்ததை அடுத்தும், அசலங்காவை இரண்டு போட்டி வடிவங்களுக்கும் தலைவராக்க தேர்வுக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தநிலையில், சரித் அசலங்கவை தலைமையாக கொண்டு, இந்தியாவுக்கு எதிரான வெள்ளை பந்து தொடருக்கான இலங்கை அணி விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக்
அமெரிக்காவில் நடைபெற்ற இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றிய பல சிரேஸ்ட துடுப்பாட்ட வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) சிறப்பாக செயற்பட்டவர்கள் மீண்டும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் எல்.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற குசல் ஜனித் பெரேரா, தினேஸ் சந்திமால் மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோர் இலங்கையின் இருபதுக்கு20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |