வாகன இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி சர்வதேச தரத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடல்
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது சுமார் 4 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளன.
இந்த புதிய உற்பத்தி நடவடிக்கைகள் சர்வதேச தரத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னைய ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அச்சிடும் நடவடிக்கை முன்னெடுப்பு
இதன் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் வாகன உரிமையாளர்கள் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் அதுவரை அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில் தற்போது நிலுவையில் உள்ள பெருமளவிலான இலக்கத் தகடுகளை விரைவாக அச்சிட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |