கட்சி அலுவலகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் - ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை தொகுதி அமைப்பாளரின் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளர் லக்ஷ்மன் திஸாநாயக்க நேற்று (01) மாலை கேகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 36 வயதுடைய சகுந்தலா வீரசிங்க என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
யாரேனும் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் இறந்தாரா அல்லது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது இதுவரை வெளியாகவில்லை. குறித்த பெண்ணின் சடலத்தை அலுவலகத்தின் பின்புற அறையில் துப்பாக்கியுடன் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மார்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு
ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை அமைப்பாளர் லக்ஷ்மன் திஸாநாயக்கவிற்கு சொந்தமான களுகல்ல மாவத்தையில் உள்ள அலுவலகத்தின் பின் அறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பெண் கட்சி அலுவலகத்தில் பணிபுரிபவர் எனவும், நேற்று காலை பணிக்கு வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நேற்று மதியம் நடைபெற்றிருந்தது.
பெண்ணின் மார்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேகாலை பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தனவின் பணிப்புரையின் பேரில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.