ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கொன்றில் குற்றவாளியாக தீர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் மூன்று பேருக்கு எதிராக பதுளை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மூவரும் நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொட்ஸ்கி முன்னிலையில் நேற்று நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணையின்போது நீதிபதி ட்ரொட்ஸ்கி குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடும் வாக்குவாதம்
கடந்த 2019 பெப்ரவரி 10 ஆம் திகதி அல்லது அண்மித்த தினமொன்றில் பண்டாரவளை நகர வட்டச்சந்திக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியும் ஒரு குழுவினரும் ஜீப்களில் பயணம் செய்துள்ளனர்.

அதன்போது பொலிஸ் ஜீப்பொன்று அவர்களது வாகனத்தைக் கடந்து சென்றதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
தாங்கள் பயணம் செய்த வாகனத்தை முந்திச் சென்ற பொலிஸ் ஜீப் மீது கோபமடைந்த சமிந்த விஜேசிரியும் அவரது குழுவினரும், பொலிஸ் வாகனத்தின் பாதையை மறித்ததாக தெரியவந்துள்ளது.
அத்துடன் பிரதிவாதிகள், பொலிஸ் ஜீப்பில் இருந்த உத்தியோகத்தர்களைத் தாக்கி காயப்படுத்தியதோடு, அவர்களின் உயிருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து சட்டவிரோதமாகத் தடுத்தல், தாக்குதல் மற்றும் காயம் ஏற்படுத்துதல், பணியில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்தல் மற்றும் அவர்களுக்குக் காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சமிந்த விஜேசிரி உள்ளிட்ட மூவருக்கு எதிராக பதுளை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள்
இந்த விசாரணை முடிவில் சமிந்த விஜேசிரியும் அவரது சாரதி பந்துல ரத்நாயக்கவும் நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், அமைச்சர்களுக்கான பாதுகாப்புச் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ரசிக கருணாதிலக்க மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவரான சமிந்த விஜேசிரியின் சாரதி பந்துல ரத்நாயக்க தற்போது உயிரிழந்து விட்டார் என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் நிறைவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்கல் உள்ளிட்ட இவ்வழக்கின் மேலதிக நடவடிக்கைகளை ஜூலை 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி ஜெயராம் ட்ரொட்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.