தரமற்ற மதுபான விற்பனை குறித்து குற்றச்சாட்டு! தேர்தல் ஆணைக்குழுவுக்கு பறந்த மனு
தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மது விநியோகங்களை மலையக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா. பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அறிக்கை
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இன்றைய காலக்கட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தை பொருத்தவரையில் கல்வியிலும் சரி ஏனைய துறைகளிலும் சரி வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக காணப்படுகின்றது.
ஆனால் ஒரு சில அரசியல் நபர்களுக்காகவும் அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் தனிநபர்களால் குரல் எழுப்பி மலையகத்தை இலக்கு வைத்து தவறான கருத்துக்களை ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மது விற்பனைகளை மலையக தொழிற்சங்கள் முன்னெடுத்து வருகின்றார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டு தொடர்பான செய்தி ஒன்று அண்மையில், சகோதர தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
தேர்தல் காலங்களில் இவ்வாறான பொய்யான தேர்தல் பிரசாரங்களை பரப்பி அவர்களை பலப்படுத்திக் கொள்வதற்காக கருத்துக்களை ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
சட்ட நடவடிக்கை
இதற்கு அப்பால் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிப்பதன் ஊடாக மலையக மக்களின் வாழ்க்கை சுபீட்சமாக அமையும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.
அதாவது ஒரு சில பகுதிகளில் இவ்வாறான தவறான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையில் எந்த ஒரு தொழிற்சங்கமும் இவ்வாறான கீழ்த்தரமான செயல்பாடுகளை செய்வதற்கு உடன்படபோவதும் இல்லை, இதற்கு மக்களும் தயார் நிலையில் இல்லை.
இந்நிலையில் பொய்யான தேர்தல் பிரசாரங்களை பரப்புபவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மலையகத்தில் இருக்கும் அனைத்து தொழிற்சங்கமும் தம்முடைய எதிர்ப்பினை தெரிவிப்பதுடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமான ஒன்றிணைந்த மனுவையும் கையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.