பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கை நாளை (30.01.2026) இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சம்பள உயர்வு
2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில், அடிப்படைச் சம்பளம் 1,350 ரூபாயிலிருந்து 1,550 ரூபாயாக 200 ரூபாய் உயர்த்துவதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாயை அரசாங்கம் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த சம்பள உயர்வுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.