விடுதலை புலிகள் கூட இதனை செய்யவில்லை: நாட்டில் பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது - சாகர காரியவசம்
தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
படு பயங்கர சம்பவம்
அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும்.
தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால், இந்த அரசாங்க ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
மேலும், அரசாங்கம் நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காகப் பாதாளக் குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மக்கள், நாய் பூனைகள் போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |