வாக்குறுதிகள் காற்றில்: மக்கள் பெரும் ஏமாற்றம் - அரசு மீது சஜித் கடும் குற்றச்சாட்டு
அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை பல்வேறு பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிய தற்போதைய அரசு, தாங்கள் மக்களுடன் செய்து கொண்ட சமூக ஒப்பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08.10.2026) நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாகக் கூறிய போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.
மீறப்பட்டுள்ள வாக்குறுதிகள்
வேலையற்ற 80 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள் வழங்குதல் போன்ற வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.
இறக்குமதி விலையிலேயே எரிபொருள் வழங்கப்படும் என்றும், நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா நிலையான விலை வழங்கப்படும் என்றும் வாக்களித்துவிட்டு, இன்று எவற்றையும் செய்யாமல் அரசு விவசாயிகளைக் கைவிட்டுள்ளது.

ஏற்றுமதிகள் மீது கூட பெறுமதி சேர் வரி
பொருள்களின் விலையைக் குறைப்போம், வரிச்சுமையைக் குறைப்போம் என்று கூறிவிட்டு, இன்று பாடசாலை உபகரணங்கள் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறை ஏற்றுமதிகள் மீது கூட பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பராடே சட்டத்தின் ஊடாகச் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வியாபார சொத்துகள் ஏலத்துக்கு விடப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இணக்கப்பாட்டை மாற்றியமைப்பதாகக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை ஒரு எழுத்துப்பிழை கூட மாறாமல் கடந்த அரசைப் போலவே நடைமுறைப்படுத்தி வரும் இந்த அரசு, நவ - தாராளவாதக் கொள்கைகளையே முன்னெடுத்து வருகின்றது என்றார்.