சஜித் - டலஸ் அணிகள் விரைவில் இணையும்: ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள தகவல்
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(25) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீண்டும் இணையும் கூட்டணி
அவர் மேலும் தெரிவிக்கையில், “டலஸ் அணியினர் தனித்துவிடப்படவில்லை மாறாக அவர்களுடன் எமக்கு புரிந்துணர்வு இருக்கின்றது. விரைவில் அவர்கள் எதிரணியில் அமர்வார்கள் என நம்புகின்றோம்.
அனைவரும் இணைந்து பாரிய கூட்டணியை வெகுவிரைவில் உருவாக்குவோம். அந்தக் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாஸ செயற்படுவதுடன் ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடாது என்றும், கட்சியின் முடிவை மீறி கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் திசை திருப்பவே போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.