பழைய சுற்றறிக்கைகளைப் பயன்படுத்தி அனர்த்த நிவாரணங்களை வழங்க வேண்டாம் : சஜித் சுட்டிக்காட்டு
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், எதிர்பாராத காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பல அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இம்மக்களுக்காக இரவு பகலாக அயராது செயல்பட்டு வரும் மாவட்ட, பிரதேச செயலகங்கள், பொலிஸ், சுகாதார திணைக்களங்கள், பாதுகாப்பு திணைக்களங்கள் ஆற்றி வரும் சேவைகளுக்கும் முயற்சிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறுகிய காலத்தில் விரைவாக வழங்கப்பட வேண்டும். பலர் உணவு, உடைகளை கூட இழந்துள்ளனர். எனவே முறையான வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
நாடு வங்குரோத்தான வேளை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2022.05.16 ஆம் திகதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதன்பிறகு ஏற்பட்ட பொருளாதார சரிவில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த சுற்றறிக்கையின் மூலம் ஒரு நபருக்கு தினசரி சமைத்த உணவுக்கு ரூபா.450, ஒரு நபருக்கு வாரத்திற்கு உலர் உணவுக்காக ரூபா.1350, 2 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூபா.1800, 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூபா.2100, 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூபா.2400 மற்றும் 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 2700 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு நபருக்கு வாரத்திற்கு 900 ரூபாவும், 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு, ஒருவருக்கு வாரத்திற்கு ரூ.540 ரூபா வீதமே ஒதுக்கப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு பொருந்தாது என்பதால் இதனை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிவாரணங்களை வழங்கும் ஒழுங்கை படிப்படியாக முறையாக மாற்றியமைக்க வேண்டும். முறையான அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்தை கொண்டிருந்தாலும், அவை காலத்துக்கு ஏற்றால் போல் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |