ஒன்றாக இணையும் ரணில் மற்றும் சஜித் தலைமையிலான கூட்டணிகள்..! வெளியிடப்பட்ட பகிரங்க அறிவிப்பு
"நாட்டில் சர்வாதிகாரப் போக்குடன் முழு அதிகாரத்தையும் தனிக்கட்சி தன்வசப்படுத்த முனையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக இணைகின்றன" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
'ஜே.ஆரின் அரசாளுகையும் நடுத்தர பாதையும்' எனும் கருப்பொருளின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து மகாமான்ய டி.எஸ்.சேனநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கத்தால் தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று (17.09.2026) ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில், பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும் அல்லது அரசியல் சலுகைகளை அடிப்படையாகக் கொண்ட கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் சார்பான முற்போக்கான கொள்கைச் சட்டகத்தின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைகின்றன.

நாட்டுக்குரிய ஒரே எதிர்காலப் பயணம் வலதுசாரியோ இடதுசாரியோ அல்ல, மாறாக ஜே.ஆர். ஜயவர்தனவின் நடுத்தரப் பாதையாகும். சந்தைப் பொருளாதாரத்தை மனிதநேய முதலாளித்துவத்துடன் இணைத்து, சமூக ஜனநாயகத்தை உள்வாங்கும் சமூக நலன்புரி அரச எண்ணக்கருவையே நாம் பின்பற்றுகின்றோம்.
மாற்றீடு தேடும் நிலைமை
ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரிக் கொள்கைகளுக்குச் சிக்னல் காட்டிவிட்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசு, தற்போது வலதுசாரிப் பக்கம் சாய்ந்து வருவதுடன் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றது. இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்த 220 இலட்சம் மக்களும் தற்போது பரிதவித்துப்போய் மாற்றீட்டைத் தேடிக்கொண்டுள்ளனர்.

நாட்டில் தற்போது 30 முதல் 40 சதவீதமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசியல் பொருளாதார ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டும் என்றார்.

