குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் : சஜித் காட்டம்
தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் உடகே பதவி விலக தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் நாடாளுமன்றில் இன்று (06.12.2023) கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
கணக்காய்வு அறிக்கையின்படி, சஜித் பிரேமதாச வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்த காலத்தில் 10 பில்லியன் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மஹிந்தானந்த குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்தே இந்த விவாதம் தொடங்கியது.
எதிர்க்கட்சித் தலைவர்களின் மனைவிக்கு சொந்தமான சலூனில் கடமையாற்றும் பத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய கலாசார நிதியத்தில் இருந்து 10 பில்லியன் ரூபா தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கலாசார அலுவல்கள் அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று மஹிந்தானந்த கேட்டுக்கொண்டார்.
பிரித்தானியாவில் கொள்வனவு செய்யப்பட்ட வீடுகள்
சஜித் பிரேமதாச கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் சிறிகொத்தவை புனரமைப்பதற்காக 1.6 மில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2011ஆம் ஆண்டு சைக்கிள் ஓட்டப் பந்தயம் மற்றும் அப்போதைய ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுக்கு மத்திய கலாசார நிதியத்தில் இருந்து மில்லியன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.
அதேநேரம் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தாம், தமது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
இந்த நேரத்தில் சஜித் பிரேமதாசாவை பதவி விலகுமாறு அலும்கமகே வலியுறுத்தினார். இந்தநிலையில், மத்திய கலாசார நிதியத்தின் நிர்வாக சபையின் முறையான அனுமதியின்றி சில தொகைகள் செலவிடப்பட்டுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே எவ்வாறு பிரித்தானியாவில் வீடுகளை கொள்வனவு செய்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது தமது தாத்தா ஒரு கோடீஸ்வரர் மற்றும் தமது தந்தை ஒரு தொழிலதிபர், எனவே தமக்கு எப்போதும் செலவழிக்க நிதி இருந்தது' என்று மஹிந்தானந்த அலுத்கமகே பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |