முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தை விமர்சித்த சஜித்
முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், அழகியல் பாடங்களை நீக்குவது முட்டாள்தனமான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“2006ஆம் ஆண்டில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற பாடம், முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தில் பரீட்சை திணைக்களத்தால் மதிப்பிடப்பட்ட 7 முக்கிய பாடங்களுக்குள் உள்ளடக்கப்படவில்லை.
முட்டாள்தனமான தீர்மானம்
இலங்கையை டிஜிட்டல் நாடாக உருவாக்கும் நோக்கில் செயற்படும் இவ்வேளையில், இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கக் கூடாது.
முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தத்தின்படி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற பாடத்தை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களில் ஒன்றாக அதனை உள்ளடக்குவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
ஆனால், மாறிவரும் தொழில்நுட்ப யுகம் உருவாகியுள்ள இவ்வேளையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம் என்ற பாடம் உள்ளடக்கப்பட வேண்டும்.
அவ்வாறே அழகியல் பாடத்தையும் நீக்கியுள்ளனர். எனவே இந்தப் பாடங்களை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் முட்டாள்தனமான செயல். எனவே, இது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |