குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் விடாது கல்வியைத் தொடர வேண்டும்: ரணில்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான அனைத்து மாணவர்களும் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும் எனவும் இதற்காக ஜனாதிபதி நிதியம் புலமைப் பரிசில்களை வழங்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சாதாரண தர, உயர் தர மாணவர்களைப் போன்று பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கான கல்வி நிறுவனங்களில் கற்கும் பிக்குகள் மற்றும் பிக்குனிகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் 3000 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்(24) அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியம்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"ஜனாதிபதி நிதியத்தின் புலைமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் மற்றுமொரு புதிய திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.
அதனால் பிரிவெனாக்களில் பயிலும் சாதாரண மாணவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
அவர்களுக்குரிய தொகையை வங்கிகளில் வைப்புச் செய்துள்ளோம்.
கடந்த நான்கு வருடங்கள் கஷ்டத்திலிருந்த நாடு இன்று வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகின்ற காரணத்தினால் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியுள்ளது.
அதற்காகவே ‘அஸ்வெசும’மற்றும் ‘உறுமய’ போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல புலமைப்பரிசில் திட்டங்களை அறிமுகப்படுத்தினோம்.
நாட்டின் பொருளாதாரச் சரிவினால் கிராமப் பகுதிகளில் இருந்த விகாரைகளும் பிக்குகளும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. எத்தகைய காரணங்களுக்காகவும் பிக்குகளின் கல்வி நிலை சரிவடைய இடமளிக்க கூடாது.
அதற்காகவே இந்த திட்டத்தை பிக்குகளுக்காகவும் பிக்குனிகளுக்காகவும் செயற்படுத்துகிறோம். புத்த சாசனம் குறித்து கவனம் செலுத்தும்போது பிக்குகள் சமுதாயத்தைக் கட்டியெழுப்பக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்க வேண்டியுள்ளது.
இதற்காக முன்னெடுக்ககூடிய முக்கியமான திட்டமாக இந்த புலைமைப் பரிசில் திட்டத்தைக் குறிப்பிடலாம்.
நாட்டில் பௌத்த கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இது மேம்படுத்தப்பட வேண்டும்.
பிரிவெனா முறைமை ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு உதவிகளை வழங்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
நாட்டில் எத்தகைய பிரச்சினைகள்
இருந்தாலும் ஒருபோதும் அதற்குரிய பொறுப்புக்களை கைவிடப்போவதில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |