இராணுவத்தின் முதுகெலும்பை உடைக்கப் பாரிய சதி! சுரேஷ் சலேவின் உருவப்படத்துடன் சாகர காரியவசம் முழக்கம்
இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டு அநீதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று(8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
நாட்டுக்காக அர்ப்பணிப்பு
இதன்போது மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உருவப் படத்தைத் தனது பின்னணியில் காட்சிப்படுத்தியவாறு அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
"சுரேஷ் சலே என்பவர் தனது சொந்தத் திறமையினாலும், அர்ப்பணிப்பினாலும் இராணுவத்தில் ஜெனரல் பதவி வரை உயர்ந்த ஒரு தேசிய வீரன் ஆவார்.

அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு மூத்த இராணுவ அதிகாரி. தற்போதைய அரசியல்வாதிகளைப் போல மக்களுக்குப் பொய் கூறி, மக்களை ஏமாற்றிப் பதவிகளைப் பெற்றவர் அவர் அல்லர்.
மகிந்த ராஜபக்சவின் அரசியல் தலைமையின் கீழ், இந்நாட்டில் நிலவிய 30 ஆண்டுகால கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ஆனால், இன்று அவர் ஈவிரக்கமற்ற முறையில், அமானுஷ்யமாக நடத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இதேபோன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) என்பவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறி கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இறுதியில், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் காணாமல்போன பழைய சம்பவம் ஒன்றைக் காட்டியே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டாரே தவிர, இன்று வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டோ அல்லது ஆதாரங்களோ முன்வைக்கப்படவில்லை.
தற்போது சுரேஷ் சலேவும் அதே போன்றதொரு அரசியல் பழிவாங்கலுக்கே உள்ளாக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறானது எனக் கூறிக்கொண்டே தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. இந்நாட்டில் நிலவிய எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே கடந்த காலத்தில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அன்று இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பிய அநுரகுமார திஸாநாயக்க, இன்று தனது சொந்தக் கையொப்பத்தைப் பயன்படுத்தி, அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலேயைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தாமதப்படுத்தக் கூடாது! அருட்தந்தை சிரில் காமினி
பின்னணியில் பாரிய சதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது நல்லாட்சி அரசின் போது, தேசிய பாதுகாப்பு முழுமையாகச் சீர்குலைக்கப்பட்டிருந்த ஒரு பின்னணியிலேயே அரங்கேறியது.
அதுமட்டுமன்றி, உலகின் மிகப் பலத்த புலனாய்வு அமைப்பான அமெரிக்காவின் எப்.பி.ஐ. கூட இது ஒரு இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயல் என்பதைத் தனது விசாரணை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் நடப்பதற்கு முன்னர், இவ்வாறானதொரு தாக்குதல் நாட்டில் நடக்கக்கூடும் என அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் எச்சரித்த போது, அதற்கு எதிராகச் சஜித் பிரேமதாஸ தரப்பில் இருந்த தீவிரவாத ஆதரவுக் குழுக்களே கூச்சலிட்டன.
மேலும், இந்தச் சம்பவங்கள் நடைபெறும் காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையிலேயே இருக்கவில்லை. அவர் தூதரகப் பணிகளுக்காகவும் பயிற்சிகளுக்காகவும் வெளிநாட்டிலேயே தங்கியிருந்தார்.
இலங்கை மண்ணிலேயே இல்லாத ஒரு அதிகாரியை, தற்போதைய ஜனாதிபதி தனது கையொப்பத்தைப் பயன்படுத்திச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வதன் பின்னணியில் பாரிய சதி ஒளிந்துள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க
தற்போதைய ஜே.வி.பி. அரசு ஆட்சிக்கு வருவதற்குப் புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ. டயஸ்போரா அமைப்புகளும், தீவிரவாதக் குழுக்களுமே ஆதரவு வழங்கின. அவர்களின் பிரதான நோக்கம் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பை முழுமையாகச் சீர்குலைப்பதாகும்.
எதிர்காலத்தில் இந்நாட்டில் மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் உருவானால், அதற்கு எதிராக நாட்டை நேசித்து களமிறங்கக்கூடிய இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே இந்த டயஸ்போரா அமைப்புகளின் தேவையாக உள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தப் புலம்பெயர் பிரிவினைவாதிகளின் தேவைகளையே தற்போது நிறைவேற்றி வருகின்றார்.
கடந்த கால பயங்கரவாதப் போரின் போது தலதா மாளிகை, ஸ்ரீ மகா போதி, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் அரந்தலாவ ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் பிக்குகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.
அன்று சுரேஷ் சலே போன்ற வீரர்கள் போராடியே இந்த நாட்டுக்கு அமைதியைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று நாட்டைப் பாதுகாத்த வீரர்களைச் சிறையில் அடைத்து, பிரிவினைவாதிகளின் தேவைகளை இந்த அரசு பூர்த்தி செய்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan