தாயக வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்திருந்தால் இயக்கம் அழிக்கப்பட்டிருக்காது : சபா குகதாஸ்
தாயக வளங்களையும் மக்களையும் ஆழமாக நேசித்தமையால் வேறு நாடுகளுக்கு வளங்களை கொடுக்க தலைவர் பிரபாகரன் மறுத்து விட்டார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வெளிநாடுகள் கேட்ட நிலப்பரப்புக்கள் மற்றும் வளங்களை தாரை வார்த்திருந்தால் 2009 அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார்கள் ஆனால் இலங்கையின் பேரினவாத அரசாங்கம் தங்கள் ஆட்சி அதிகாரங்களையும் பதவிகளையும் தக்க வைக்க மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னர் இன்று வரை பாரிய அளவில் வெளிநாடுகளுக்கு வளங்களும் நிலங்களும் விற்பனை செய்யப்படுகின்றது.
2002 ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தில் யப்பான் புல்மோட்டை இல்மனைற்றை குறிவைத்து அன்றைய தூதர் ஐயசூசி அகாசி கிளிநொச்சி சென்று வன்னி முழுவதும் தாங்கள் மின்சாரம் பெற்று தருவதாக கூறி அதற்கு பதிலீடாக இல்மனைற்றை பெற அனுமதி தருமாறு கேட்டார்.
சீனா கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கும் மேலும் இரண்டு நாடுகள் மன்னார் கடல் பகுதியில் உள்ள பெற்றோலிய வளத்தை குறி வைத்து விடுதலைப் புலிகளின் தலைமையை சந்தித்தனர் யுத்தம் கோரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட நிலப்பரப்பிற்கு அமெரிக்காவின் பேரம் பேசல் நடைபெற்றது.
இவை யாவற்றிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் தலைமை இணங்கியிருந்தால் முள்ளிவாய்க்கால் பேரழிவில் இருந்து பாதுகாக்கப் பட்டிருப்பார்கள்.
இனத்தை அதன் தாயகத்தை தாண்டி தலைவர் பிரபாகரன் தனது பதவியை பாதுகாக்க நினைத்திருந்தால் இன்று சிங்கள ஆட்சியாளர் செய்வதை அவரும் செய்திருந்தால் வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்திருந்தால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டிருக்க மாட்டாது என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |