நினைவேந்தலை அடக்கினால் மீண்டும் இருண்ட யுகம் உருவாகும்! சபா குகதாஸ் எச்சரிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அடக்கினால் மீண்டும் இருண்ட யுகம் உருவாகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்றையதினம் (14.05.2024) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் ஏவி விட்ட வன்முறையும் அதனால் ஏற்பட்ட பாரிய இனவழிப்பும் முழு நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளியது.
தடுக்கப்படும் நினைவேந்தல்கள்
அத்துடன், வாக்களித்த சொந்த மக்களால் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி ஓட ஓட துரத்தப்பட்டதை பேரினவாத ஆட்சியாளர்கள் சிறிது காலத்தில் மறந்து விட்டார்கள் என்பது மீண்டும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துள்ள வன்முறைகள் காட்டுகின்றன.
முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் ஐந்து மாதங்கள் உணவு விநியோகம் முற்றாக தடுக்கப்பட்டு, அப்பாவிப் பொதுமக்களும் குழந்தைகளும் பட்டினிக்கும் நோய் வாய்ப்பிற்கும் உட்படுத்தப்பட்டனர்.
அதனையடுத்து, சில ஆண்டுகளில் முழு நாட்டையும் பிச்சை ஏந்த வைத்த வரலாற்றை மறந்து மீண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளை நினைத்து மேற்கொள்ளும் நினைவேந்தல்கள் தடுக்கப்படுகின்றன.
நாட்டின் மீள் எழுச்சி
அவற்றில் பங்கு கொள்பவர்களை கைது செய்வது மீண்டும் இந்த நாட்டை ஒரு இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விடக்கூடாது.
இலங்கைத் தீவின் மீள் எழுச்சி என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படுவதன் மூலமும் தேசிய இனப் பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வு வழங்குவதன் மூலமுமே வெற்றி பெறும் இல்லையேல் மீண்டும் மீண்டும் இருண்ட யுகம் தான் - என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |