அரசை வன்மையாக கண்டிக்கும் சர்வதேச ஊடக அமைப்பு
இலங்கை அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாக சார்க் (SAARC) பத்திரிகையாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ராஜு லாமா தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்த மேற் கொள்ளப்படும் பொலிஸ் மிரட்டல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக சார்க் பத்திரிகையாளர்கள் மன்றத்தின் (SJF) மத்திய குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசின் அடக்குமுறை
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தனியார் தொலைக்காட்சி வலையமைப்பு வெளியிட்ட செய்தி தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கை, சுதந்திர ஊடகம் மீதான நேரடித் தாக்குதலாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த 15 மாதங்களாக ஊடக ஒடுக்குமுறையின் ஆதிக்க போக்கைக் காட்டி வருகிறது. ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதாக உறுதியளித்த அரசாங்கம் இன்று 'சர்வாதிகாரப் போக்கை' காட்டுகிறது.

விமர்சகர்களை மௌனிக்க வைப்பதற்கு பொலிஸ் அதிகாரத்தை அரசு தந்திரோபாயமாக பயன்படுத்துவதை நிறுத்தி சர்வதேச ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக நெறிமுறைகளை பாதுகாக்குமாறு சார்க் பத்திரிகையாளர்கள் மன்றம் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.