கிழக்கில் உக்ரைனுக்கு பாரிய சவால்: புடினுக்கு மே 9 ஆம் திகதி வெற்றி நிகழ்விலேயே குறி
உக்ரைனியப் படைகள் நாட்டின் கிழக்கில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை எதிர்வுகூறியுள்ளது.
அங்கு ரஷ்ய துருப்புக்கள் ஒரு புதிய தாக்குதலுக்கு பெருமளவில் குவிந்துள்ளதாக சிஐஏ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஒருவர் தெரிவித்தார்.
பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சிஐஏயின் முன்னாள் பணிப்பாளர் டேவிட் பெட்ரேயஸ், இந்த இடத்தில் "ரஷ்யர்கள் தங்கள் முயற்சிகள் அனைத்தையும் நாடு முழுவதும் இல்லாமல் ஒரே பகுதியில் குவிப்பதை காணமுடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உக்ரைன் கிழக்கின் நிலைமை பல காரணிகளைச் சார்ந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்
ரஷ்யர்களுக்கு வானிலை சாதகமாக இருந்தால், வயல் வறண்டு போனால், அந்த வயல்களில் கனரக வாகனங்களை பயன்படுத்தி முன்னேற்ற வாய்ப்புக்கள் உள்ளன
இந்தநிலையில் கூடுதல் பாதுகாப்பு உதவிகள் உக்ரைனை விரைவாக அடைந்தால் அதுவும் கிழக்கின் போர் நிலைமையை மாற்றும் காரணியாக அமையும்.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இப்போதே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் ஆர்வமில்லை" என்றும் மொஸ்கோவில் ஆண்டுதோறும் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாள் அணிவகுப்பு மே 9 அன்று இடம்பெறும் போது உக்ரைனில் உறுதியான வெற்றியை அவர் விரும்புவதாகவும் சிஐஏ அமைப்பின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.