நீதிபதி அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றத்தில் வலுக்கும்.. இலங்கை ஆசிரியர் சங்கம் எழுப்பும் சந்தேகங்கள்
யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை எங்களால் அடக்க முடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும், "யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அலெக்ஸ் ராஜா திடீரென பதுளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
நீதித்துறை அடக்குமுறை
இந்தப் பின்னணியில் அவர் கையாண்ட வழக்குகளே காரணம் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டியுள்ள நிலையில் வடமாகாண ஆளுநரும் ஒரு அமைச்சரும் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பத் தகுந்த முறையில் அறிவதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.

இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்தால் நீதித்துறையை அடக்குவோம் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணமாக அமைகிறது.
மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த அரசாங்கங்களை விட மோசமாக நீதித்துறையின் மேல் அடக்குமுறைகளை மேற்கொள்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
முன்னாள் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா பருத்தித்துறை நகர சபை விவகாரம் மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற ஆசிரியர் இட மாற்றங்களை நீதியின் பக்கமாக அணுகியதால் அவர் மீது அரசாங்க தரப்புக்கு அதிர்ச்சி நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதன் பின்னணியில் வட மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் ஒருவரின் அழுத்தத்தின் பெயரில் நீதிபதியின் திடீர் இட மாற்றம் இடம் பெற்றிருப்பதற்கான வலுவான சந்தேகங்கள் எழுகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.