சிரிய, ஆப்கானிய அகதிகளின் வழக்குகளை மீண்டும் ஆரம்பித்த கிரீஸ்: திருப்பி அனுப்ப அதிரடி நடவடிக்கை
கிரீஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளின் புகலிட வழக்குகளை அந்நாட்டு அரசு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தத் தொடங்கியுள்ளது.
உள்நாட்டுப் போர்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி, அவர்களை மீண்டும் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிரீஸ் நாட்டின் புலம்பெயர்ந்தோர் துறை அமைச்சர் தானோஸ் ப்ளெவ்ரிஸ் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்ட உத்தரவின்படி, இரத்து செய்யப்பட வாய்ப்புள்ள அகதிகளின் வழக்குகள் அனைத்தும் மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகின்றன.
புகலிட உரிமைகள்
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கானோரின் புகலிட உரிமைகளை கிரீஸ் இரத்து செய்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத ரீதியான அணுகுமுறையும் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

"தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளுடன் கிரீஸ் பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை" என்று நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசிய அமைச்சர் ப்ளெவ்ரிஸ், தங்களுக்கு ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ், ஆர்மீனியா மற்றும் இந்தியா போன்ற மதச்சார்பற்ற அல்லது கிறிஸ்தவ நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையே முன்னுரிமையாகத் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் புதிய 'புகலிடம் மற்றும் புலம்பெயர்தல் ஒப்பந்தத்தை' அமல்படுத்த உள்ள நிலையில், கிரீஸ் தனது எல்லைக் கட்டுப்பாடுகளையும் அகதிகளை வெளியேற்றும் கொள்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
அரசின் இந்த முடிவால், கிரீஸில் பல ஆண்டுகளாக நேர்மையாக வரி செலுத்தி, தொழில் செய்து, குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான சிரிய மற்றும் ஆப்கானிய அகதிகள் தங்களின் எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.