போர்க்களத்தில் 2500 உக்ரைனிய படையினரின் விதியை தீர்மானிக்கப்போகும் இறுதி நிமிடங்கள்…….(Video)
துறைமுக நகரான மரியுபோலின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே தமது படைகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் அங்குள்ள படையினருடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இப்போதைக்கு அங்கு நிலைமை மிகவும் மோசமானது என ஜனாதிபதியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரின் தகவல்படி, சுமார் 2,500 உக்ரைனிய வீரர்கள் இரும்பு ஆலைக்குள் இருந்ததாகவும், அவர்கள் வெளியேறுவதை ரஸ்ய துருப்புக்கள் தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த செய்தி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை
இதேவேளை முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் போரிடும் உக்ரைனிய வீரர்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டுமானால், அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையவேண்டும் என்று ரஸ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைனிய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு கூலிப்படையினர் மரியுபோலில் இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மொஸ்கோ நேரப்படி 06:00 முதல் 13:00 வரையான காலத்தில் அவர்களை ஆயுதங்களை கீழை வைத்தால் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று ரஸ்யா அறிவித்துள்ளது.
தலைநகர் கியேவில் இருந்து சரணடையும் அனுமதிக்காக காத்திருக்காமல், தாங்களாகவே முடிவெடுக்குமாறும் ஆலைக்குள் இருக்கும் உக்ரைனிய துருப்புக்களுக்கு ரஸ்யா அறிவித்தல் விடுத்து வருகிறது.
இதற்கிடையில் மரியுபோலில் எஞ்சியுள்ள போராளிகளை அழித்தால் ரஸ்;யாவுடனான பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஜனாதிபதி ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.