Youtube நிறுவனம் தடைசெய்யப்படும் - ரஷ்யா எச்சரிக்கை!
கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் அம்மை போன்ற தொற்று நோய்களைப் பற்றிய தவறான தகவலைப் பரப்பும் அனைத்துக் காணொளிகளும் உடனடியாக நீக்க யூடியூப் (Youtube) நிறுவனம் புதிதாக நடவடிக்கை எடுத்துள்ளது.
கூகுளுக்குச் (Google) சொந்தமான இணைய காணொளி நிறுவனமான யூடியூப் நிறுவனமானது, "அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மன இறுக்கம், புற்றுநோய் அல்லது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றன என்று பொய்யாகக் குற்றம் சாட்டும் எந்தவொரு காணொளியும் உடனடியாக நீக்கப்படும்" என்று கூறியிருந்தது . இதற்கமைய இதுவரை சுமார் 130,000 காணொளிகளை நீக்கியுள்ளதாகவும், மேலும் முயற்சிகளை முடுக்கிவிடுவதாகவும் கூறுகிறது.
அத்தோடு கோவிட் -19 குறித்த தவறான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிடும் கணக்குகளை யூடியூப் நிறுவனம் தமது தளத்தில் இருந்து முற்றாக நீக்கி வருகின்றது.
அந்தவகையில் ரஷ்ய அரசின் ஆதரவில் இயங்கிவரும் RT ஊடகக் குழுமத்தின் இரு கணக்குகள், தவறான தகவல்களை தொடர்ச்சியாக பதிவேற்றுவதால் அவற்றை யூடியூப் நிறுவனம் முற்றாக நீக்கியுள்ளது. இச்செயலினால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்ய அரசு, உடனடியாக அவ்விரு கணக்குகளும் மீண்டும் யூடியூப் தளத்தில் இயக்கவேண்டும், இல்லாவிடில் யூடியூப் இணையம் ரஷ்யா முழுவதும் தடைசெய்யப்படும் என எச்சரித்துள்ளது.
கூகிள் நிறுவனமானது அமெரிக்காவினைச் சார்ந்தது என்னும் நிலையில், ரஷ்ய அரசின் நேரடி வழிநடத்தில் இயங்கும் RT ஊடகக் குழுமத்தின் கணக்குகள் நீக்கியது ரஷ்ய அரசுக்கெதிரான தொடர்ச்சியான புதுமாதிரியான பனிப்போர் என ரஷ்ய அரசு கருதுவதோடு மாத்திரமில்லாது தக்க பதிலடி கொடுக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்,