ரஷ்யா – உக்ரைன் போர்: அபுதாபி பேச்சுவார்த்தையில் கைதிகள் பரிமாற்றத்திற்கு உடன்பாடு
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தை, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துடன் முடிவடைந்துள்ளது.
இதன்படி, இரு நாடுகளும் பெரிய அளவிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
இது 2 முதல் 3 வாரங்களுக்குள் நடைபெறலாம் என ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில், பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்ததாக அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பேச்சுவார்த்தை விபரங்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எடுத்துரைக்க மொஸ்கோ செல்லவுள்ளர் பின்னர் அயர்லாந்தின் டப்ளினில் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்து ஆலோசிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பில், போர் முடிவுக்கு வருமா, போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக எந்தவொரு முக்கிய உடன்பாடும் எட்டப்படவில்லை. குறிப்பாக பிரதேச உரிமை தொடர்பான விவகாரம் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
கருத்து வேறுபாடுகள்
இதேவேளை, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்க வேண்டும் என்று யுக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றாலும், கைதிகள் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள இணக்கம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், நிலப்பரப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் போருக்குப் பிந்தைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் இரு தரப்பினருக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.