உக்ரைன் மீது 298 ட்ரோன்கள்.. 69 ஏவுகணைகளை செலுத்தி ரஷ்யா பாரிய வான் தாக்குதல்
ரஷ்யா(Russia) 69 ஏவுகணைகள் மற்றும் 298 ட்ரோன்களை நள்ளிரவில் ஏவி உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்
2022 ஆம் ஆண்டு போர் ஆரம்பமானதில் இருந்து உக்ரைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறியுள்ளார்.
கீவ் நகரத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன்,16 பேர் காயமடைந்துள்ளனர்.
ட்ரோன் பாகங்கள் குடியிருப்பு கட்டிடங்களையும் ஒரு தங்குமிடத்தையும் சேதப்படுத்தியுள்ளது.
சைட்டோமிர் பகுதியில் இறந்தவர்களில் 8, 12 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் அடங்குவர்.
க்மெல்னிட்ஸ்கியில் நான்கு பேரும், மைக்கோலைவில் ஒருவரும் இறந்ததாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதோடு, மார்கலிவ்கா கிராமத்தில் பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா மீது கடுமையான தடை விதிக்க
இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"சாதாரண நகரங்கள் மீது வேண்டுமென்றே ரஷ்யா தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ரஷ்யா மீது உண்மையிலேயே வலுவான அழுத்தம் கொடுக்கப்படாவிட்டால் இந்த மிருகத்தனத்தை நிறுத்த முடியாது" என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தையும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |