உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா தாக்குதல்: 30 பேர் பலி
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராமாடோர்ஸ்க் (Kramatorsk) நகரில், பொதுமக்கள் பயணித்த இரண்டு பேருந்துகள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்துகள் மீது ரஷ்யா வான்வழி குண்டுகளை (Glide bomb) வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொடூரத் தாக்குதல்..
அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து ரஷ்யா இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளதாக டொனெட்ஸ்க் மாகாண ஆளுநர் வடிம் பிலாஷ்கின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, வடக்கு உக்ரைனின் பிலுகி நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது, நேற்று புதன்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்ய தொழில்நுட்ப நிறுவனமான 'யாண்டெக்ஸ்' (Yandex) தரவு மையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.