கால்பந்தின் சகாப்தம் முடிவுக்கு வந்தது! சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் ரொனால்டோ..
உலகக் கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
41 வயதான ரொனால்டோ, 2003ஆம் ஆண்டு போர்த்துக்கல் தேசிய அணியில் அறிமுகமானதிலிருந்து இதுவரை 234 சர்வதேச போட்டிகளில் விளையாடி 146 கோல்களைப் பெற்றுள்ளார்.
அதிக கோல்கள்
இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக கோல்களைப் பெற்ற வீரர் என்ற உலக சாதனைகளையும் அவர் தன்வசம் வைத்துள்ளார்.
தனது ஓய்வு தொடர்பில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளியில், போர்த்துக்கல் மக்களுக்கு உருக்கமான செய்தியொன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், தேசிய அணியின் 7ஆம் இலக்க ஜெர்சியை ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள ரொனால்டோ, கடந்த 23 ஆண்டுகளாக அந்த ஜெர்சியை அணிந்து நாட்டுக்காக விளையாடியதைப் பெரும் பாக்கியமாகவும் பொறுப்பாகவும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
கௌரவத்துடன் பிரியாவிடை
மேலும், 2003ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆரம்பமான தனது பயணம் வாழ்க்கையையே மாற்றியமைத்ததாகவும், இந்த முடிவை எடுப்பது எளிதானதாக இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரொனால்டோவுக்கு உரிய கௌரவத்துடன் பிரியாவிடை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்ய விரும்புவதாக போர்த்துக்கல் கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ரொனால்டோ தனது சர்வதேச கால்பந்துப் பயணத்தில் ஆறு ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்றுள்ளார்.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரில் போர்த்துக்கல் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், 2016ஆம் ஆண்டு ரொனால்டோ தலைமையில் சம்பியன் பட்டத்தையும் வென்றது.
இதனிடையே, ரொனால்டோவின் நீண்டகால போட்டியாளரான ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வுபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்- இந்ரஜித்
you may like this..