இந்தியா மற்றும் சீன ஏகாதிபத்தியங்கள் நாட்டை அழித்து விட்டன:இளைஞர்களை வழி நடத்த ரோஹன விஜேவீரவின் புதல்வருக்கு அழைப்பு
நாட்டின் தற்போதைய அரசாங்கம் ராஜினாமா செய்து, இடைக்கால அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் இளம் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். இந்த இளைஞர்கள் அணியை வழிநடத்தும் பொறுப்பை மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர ஏற்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
அரசாங்கம் பதவி விலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். குழியில் தள்ளினால், அவர்களே அதனை மீட்டு எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இளைஞர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். சிறந்த இளம் தலைவர்கள் இருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் ஒரு மேசைக்கு வர வேண்டும். அவர்களிடம் சிறந்த இளைஞர்கள் இருக்கின்றனர்.
இந்தியாவின் ஏகாதிபத்தியம் நாட்டை அழிக்கும் என ரோஹன விஜேவீர அன்றே கூறினார். இந்திய ஏகாதிபத்தியம் மட்டுமல்ல சீன ஏகாதிபத்தியமும் எமது நாட்டை அழித்துள்ளது.
இதனால், நாட்டின் இளம் அணியினரை வழி நடத்த வருமாறு உவிந்து விஜேவீரவுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். உங்களது தந்தைக்காகவும் நாட்டின் நியாயத்திற்காகவும் வாருங்கள் என அழைப்பு விடுக்கின்றோம் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



