சட்டவிரோத மணல் அகழ்வு: கனரக வாகனத்தை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் (Photos)
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிக் கொண்டிருந்த கனரக வாகனத்தை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் அதனை மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நீண்ட நாட்களாகக் குறித்த பகுதியில் மணல் மண் ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பதை
அவதானித்த கிராம இளைஞர்கள் அது தொடர்பில் ஆழியவளை கிராம சேவகர், வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலர் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
ஆனாலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளதுடன், இன்று அதிகாலை மண் ஏற்றிக்கொண்டிருப்பதனை அவதானித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து அங்கிருந்து வாகனத்தை செல்லவிடாது தடுத்து கொண்டு ஆழியவளை கிராம சேவகர், மற்றும் பிரதேச செயலகர் ஆகியோருக்கு பல தடவைகள் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
எனினும் தொலைபேசி அழைப்பிற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்காத நிலையில், மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்து அவர்களிடம் வாகனத்தையம், சாரதியையும் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் வாகனத்தையும், சாரதியையும் பொலிஸார் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.






