ஒரே இரவில் இருவேறு பிரதேசங்களில் கொள்ளையிட்ட மர்ம நபர்கள் - சிசிடிவி காட்சிகளால் அச்சத்தில் மக்கள்
ஒரே இரவில் டயகம மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரண்டு கொள்ளைச் சம்பவங்களில் டயகம நகரில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் திருடிச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
கேமராவில் பதிவான காட்சிகள்
அத்துடன், குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த பணம், தொலைபேசி, மீள்நிரப்பு அட்டைகள், மற்றும் சிகரெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்ராசி பகுதியிலும் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான பொருட்கள் மாயம்
அங்கிருந்து பொருட்களுடன் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே இரவில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள இந்த கொள்ளைச் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் டயகம மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார், சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
76 வருடங்களாக மலையக மக்களை அடிமைப்படுத்தும் தலைமைத்துவம் - அரச தரப்பு கேள்விகளுக்கு ஜீவன் தொண்டமான் பதிலடி