கொட்டகலை நகரில் ஏழு வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி
நுவரெலியா- கொட்டகலை நகரில் தனிநபர் ஒருவரால் மூடப்பட்டிருந்த பொதுவீதியொன்று, ஏழு வருடங்களின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட குறித்த வீதி, சுமார் 20 வருடங்களாக அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குச் செல்வதற்கான பொதுவீதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் மற்றுமொரு திருமண மண்டபத்தை நிர்மாணித்த நபர் ஒருவர், குறித்த வீதி தனக்குச் சொந்தமானது எனக் கூறி அதனை மூடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதி திறப்பு
இதனையடுத்து, வீதியை மீண்டும் திறப்பதற்காக நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் சாதகமான தீர்ப்பு கிடைத்த போதிலும், எதிர்த்தரப்பினர் இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றதால் வீதியைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 30 ம் திகதி ஹட்டன் நீதிமன்றம் வீதியை மீண்டும் திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்ததாகவும், அதன் அடிப்படையில் நேற்று நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரிகள் வருகை தந்து வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் வழக்குத் தாக்கல் செய்த திருமண மண்டப உரிமையாளர் கே. நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஏழு வருடங்களாக மூடப்பட்டிருந்த இந்த வீதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தடையின்றிப் பயணிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.





பிரித்தானியாவிலிருந்து வெளியேற வாக்கெடுப்பு நடத்திய கிராமம்: ஏமாற்றத்தை அளித்துள்ள தகவல் News Lankasri