ஆட்சிக்கு வந்தால் குத்தகை ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவேன்! ஜீவன் தொண்டமான் அதிரடி
பெருந்தோட்டக் காணி குத்தகை ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம்
மேலும் குறிப்பிட்ட அவர்..
கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் ஆதரவு வழங்கியதாகவும், ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மதித்தே அவ்வாறு செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நலனுக்கான போதுமான திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
குறிப்பாக, மலையக மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் 62 சதவீதம் இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாகக் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு 2,224 மில்லியன் ரூபாவாக இருந்த அந்த நன்கொடை இம்முறை 4,290 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த ஆண்டு வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை அது 100 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வீடமைப்புத் திட்டம்
தாம் அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 1,300 வீடமைப்புத் திட்டங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 45 வீடுகளையே அரசாங்கம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் கிடைத்திருந்தும், அவற்றைப் பயன்படுத்தி எத்தனை வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பினார்.

நிதி ஒதுக்கீடு செய்வது மாத்திரம் போதாது, ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவிடுவதற்கான திறமையும் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில்... தொழிலாளர்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும், தனியார் பெருந்தோட்டங்களில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கு அந்த அதிகரிப்பு கிடைக்கவில்லை என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அரசாங்கம் அறிவித்துள்ள 200 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
காணி உரிமை
மலையக மக்களின் காணி உரிமை குறித்து ஜனாதிபதி தனது உரையில் எதனையும் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்த அவர், பெருந்தோட்டக் காணிகளைத் தொடர்ந்தும் குத்தகைக்கு வழங்கும் தீர்மானம் தவறானது எனக் குறிப்பிட்டார்.
மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தங்களை நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பெருந்தோட்ட நிறுவனங்கள் 200 ரூபா சம்பள அதிகரிப்புக்கு இணங்கியதற்கும் குத்தகை ஒப்பந்தத்தை நீடிப்பதற்கும் இடையில் ஏதேனும் இணக்கப்பாடு உள்ளதா என்ற சந்தேகத்தையும் எழுப்பினார்.
இவ்வாறான நிலையில், பெருந்தோட்டக் காணிகளை மீண்டும் குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், எதிர்காலத்தில் ஆளும் கட்சிக்கு வந்தாலும் அதனைத் தாம் கிழித்தெறிவதாக உறுதியாகத் தெரிவிப்பதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.