கிளிநொச்சியில் இடம்பெறும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் முக்கிய மீளாய்வு கூட்டம்
நடைமுறைப்படுத்திய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, இன்று(11.09.2026) குறித்த மீளாய்வு கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன், தேசிய வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் ஆகியோரின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வீதி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை உள்ளிட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிற்கு முன்மொழியப்பட்ட வீதி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதி
அரசாங்கத்தினால் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சில வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படாத நிலை தொடர்பாகவும், அத்துடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற வீதிகளின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துவதில் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமிய மற்றும் நகர வீதிகளின் நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் பெறப்பட்டு, வீதி அபிவிருத்திப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் தொடர்பாகவும், அதேபோன்று வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திருநகர் வீதி அபிவிருத்தி தொடர்பாக சமூக ஊடகங்களில் ஆலமரம் வெட்டுதல் குறித்து பல்வேறு கருத்துகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
வீதி அபிவிருத்திப் பணிகள்
வீதி அபிவிருத்திப் பணிகளின் போது தொழில்நுட்ப ரீதியாக மரங்களை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படும் சூழ்நிலைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாட்ட நிலையில், அவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அனுமதிகளை வழங்க முடியும் என மாவட்ட செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து வீதி வேலைத்திட்டங்களையும் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீதி வேலைத்திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டும். அதற்கமைய, ஒவ்வொரு வீதி வேலைத்திட்டத்திற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், வீதி அபிவிருத்திப் பணிகளில் ஏற்படுகின்ற சவால்களை உடனடியாகத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதுடன், துறைசார்ந்த நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.