முச்சக்கர வண்டியின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை:ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்
காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனிந்தும பிரதேசத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 56 வயதான தாய், 58 வயதான தந்தை மற்றும் 30, 26 வயதான இரண்டு மகன்களே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் இருந்து தந்தையை அழைத்துச் செல்லும் வழியில் நடந்த விபத்து
இவர்கள் தாயும் ஒரு மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்துள்ள தந்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளா்.
தந்தையை வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முச்சக்கர வண்டியை மகன் ஒருவரே ஓட்டிச் சென்றுள்ளதுடன் அவர் பல்கலைக்கழக மாணவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொட்டவ காட்டில் இருந்த 150 அடி உயரமான பழைய மரம் ஒன்று மற்றுமொரு மரத்தின் மீது சரிந்து விழுந்துள்ளது.
இதனால், மற்றைய மரத்தின் பெரிய கிளை முறிந்து வீதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது விழுந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து உடனடியாக சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். முச்சக்கர வண்டிக்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.