திடீர் வெள்ள அபாயம்! அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற எச்சரிக்கை
புதிய இணைப்பு
களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் உப அவதானிப்பு பிராந்தியத்தின் மேல்நிலைப் பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்து மழை பெய்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அடுத்த 48 மணித்தியாலங்களுக்காக மஞ்சள் நிற (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை (17) முற்பகல் 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு
மதுராவல பிரதேச செயலகப் பிரிவு
பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவு மேற்கூறிய பகுதிகளில் உள்ள குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் கிளை வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் கடுமையான அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இப்பகுதிகள் ஊடாக வாகனங்களைச் செலுத்தும்போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது அதிகபட்ச அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
ஆறுகளின் நீர்மட்டம் குறித்து அவதானம்
இருப்பினும், களு கங்கையின் மில்லகந்த நிலையத்தின் தரவுகளுக்கு அமைவாக, இதுவரையில் சிறு வெள்ள நிலைமை நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அத்தனகலு ஓயா பகுதியில் இதுவரையிலும் சிறு வெள்ள நிலைமை காணப்படுவதால், அத்தனகலு ஓயாவின் கீழ்நிலப் பகுதிகளான கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
களனி கங்கையை ஒட்டிய ஹங்வெல்ல பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாகவும், அதற்கமைய இன்றைய தினமும் மழை பெய்யக்கூடிய வானிலை காணப்படுவதால் ஆறுகளின் நீர்மட்டம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வான் கதவுகள் திறப்பு
இதேவேளை, நேற்று (15) மாலை நிலவரப்படி 73 பிரதான நீர்த்தேக்கங்களில் சுமார் 22 நீர்த்தேக்கங்களும், 19 நடுத்தர அளவிலான குளங்களும் வான்பாய்ந்துள்ளது.
எனவே எதிர்வரும் மழைவீழ்ச்சி நிலவரங்களைக் கருத்திற்கொண்டு வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.