இலங்கை மருத்துவத்துறை எதிர்கொள்ளும் நெருக்கடி: எச்சரிக்கும் வைத்தியர்கள்
அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ப்ரோபோபோல்(Propofol) மயக்க மருந்து ஊசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு உட்படும் நோயாளிகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் ப்ரோபோபோல், தற்போது இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகள் மற்றும் மருந்து விநியோக பிரிவுகளில் குறைந்து வருகின்றன.
மயக்க மருந்து பற்றாக்குறை
எனவே மருந்து கையிருப்புகளை நிரப்ப அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை நடைமுறைகள் கடுமையாக பாதிக்கும்.

மாற்று மயக்க மருந்துகள் கிடைத்தாலும், நோயாளிகளிடத்தில் ப்ரோபோபோலை போல நம்பகத்தன்மை அல்லது மருத்துவ பதிலை வழங்குவதில்லை, இதனால் அவை பல நடைமுறைகளுக்கு பொருந்தாது.

எனவே, அத்தியாவசிய அறுவை சிகிச்சைகளுக்கு இடையூறு ஏற்படுவதினை தவிர்க்க, இந்த பிரச்சினையை தாமதமின்றி தீர்க்கவும், வைத்தியசாலைகளுக்கு சரியான நேரத்தில் ப்ரோபோபோல் வழங்குவதை உறுதி செய்யவும் வைத்திய வல்லுநர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன, இலங்கை எதிர்காலத்தில் கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் சமீபத்தில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.