அத்தனகல்லு ஓயாவில் உயரும் நீர்மட்டம்..! 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அத்தனகல்லு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தனகல்லு ஓயா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களில் பதிவான கணிசமான மழைவீழ்ச்சி மற்றும் அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர்மட்ட அளவைக் கருவிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட அத்தனகல்லு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாழ்நிலப் பகுதிகள் வழியாக செல்லும் சில சாலைகள் குறிப்பிட்ட இடங்களில் நீரில் மூழ்கும் அபாயமும் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அந்த பகுதிகள் வழியாக பயணம் செய்யும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam