ரிஷி சூனக் பிரிட்டன் பிரதமராக வாய்ப்பு; 7 வாரங்களில் மூன்றாவது பிரதமர்
புதிய இணைப்பு
ரிஷி சுனக்கிற்கு 166 டோரி எம்.பிகளும், பென்னி மோர்டான்ட்-க்கு 25 டோரி எம்.பிகளும் ஆதரவு.
வேட்புமனு இன்று மதியம் 2 மணியுடன் முடிவடைய உள்ளதால் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம்.
பிரித்தானியாவில் பிரதமருக்கான போட்டியில் 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெற பென்னி மோர்டான்ட் பெற தவறினால், சில மணி நேரங்களில் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் களமிறங்கியுள்ள முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக், இன்றே கூட பிரதமராக வாய்ப்பு உள்ளது.
அதற்குத் தடையாக நிற்கும் ஒரே நபர், பென்னி மோர்டான்ட். பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டி மீண்டும் துவங்கியுள்ள நிலையில், இம்முறை வேட்பாளர் மனு தாக்கல் செய்ய விரும்புவோர், குறைந்தபட்சம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்ற புதிய விதி கடந்த வியாழக்கிழமை வகுக்கப்பட்டது.
அதன்படி பார்க்கும்போது, 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஒரே வேட்பாளர் ரிஷி சுனக்தான். அவருக்கு 142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். அவரை எதிர்த்து களமிறங்கத் திட்டமிட்டுள்ள பென்னி மோர்டான்டுக்கு இப்போதைக்கு 29 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
இன்றைக்கு மதியம் உள்ளூர் நேரப்படி 2.00 மணிக்குள் பென்னி 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதைக் காட்டத் தவறினால், பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ரிஷி சுனக்தான் என்பது இன்றே உறுதியாகிவிடும்.
விடயம் என்னவென்றால், கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆகவே, இன்று மதியத்திற்குள் 100 உறுப்பினர்களின் ஆதரவை பென்னியால் பெறமுடியுமானால், மீண்டும் அவரும் ரிஷியும் போட்டி போடவேண்டியிருக்கும்.
பிறகு இந்த இருவரில் யாரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்வதற்கு, கன்சர்வேட்டிவ் கட்சியின் 170,000 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அடுத்த வெள்ளிக்கிழமை பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பிரதமர் வேட்பாளருக்கான மனு தாக்கல் செய்வதற்கு சில மணி நேரமே இருந்த நிலையில், முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் பிரதமர் போட்டியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ரிஷி சூனக்?
ரிஷி சூனக் தனது இணையதளத்தில், "நான் ஒரு நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் நிறைய தியாகங்கள் செய்தார்கள். வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி சூனக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை பெங்களூரில் 2009இல் திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 730 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அவரது அறிவிக்கப்பட்ட சொத்துகளில் பெரும்பாலானவை அவரது மனைவிக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.
ரிஷி சூனக் சுயமாக முன்னேறியவர். அவர் தனது இணையதளத்தில், "வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து பெங்களூர் வரையிலான நிறுவனங்களுடன் இணைந்து ஒரு பெரிய முதலீட்டு நிறுவனத்தை நிறுவினேன்.
அது பலன் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். போரிஸ் ஜான்சனை முதுகில் குத்தியதற்காக ரிஷி சூனக் மீது கட்சியினர் பலர் கோபமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் ரிஷி சூனக் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகுதான் பல அமைச்சர்கள் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையை விட்டு வெளியேறினர், அதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
இதற்குப் பிறகு, புதிய பிரதமருக்கான முதல் சுற்றில் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். கடைசி சுற்றுக்கு முன், கட்சி எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும், கட்சி உறுப்பினர்களுக்கு அந்த உரிமை இல்லை. எம்.பி.க்கள் ரிஷி சூனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோரை கடைசி சுற்றுக்குத் தேர்வு செய்தனர். கடைசிச் சுற்றில் எம்.பி.க்கள் அல்லாமல், கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ரிஷியின் அரசியல் வாழ்க்கையை முன்னேற்ற போரிஸ் ஜான்சன் பெரிதும் உதவியதாக மக்கள் கூறுகின்றனர். ரிஷி சூனக் மீது அவர் மிகவும் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரிஷி செய்தியாளர்களிடம், போரிஸ் ஜான்சனை அணுகுவதற்குத் தாம் பல முறை முயன்றும் அவை செவிசாய்க்கப்படவில்லை என்று ஒப்புக்கொண்டார்.
கன்சர்வேடிவ் கட்சி இன்னும் வெள்ளையர் அல்லாத பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இல்லையென்றாலும், நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. நாடு முழுவதும் ரிஷி சூனக் சூனக்கின் புகழ் லிஸ் டிரஸ்ஸுடன் ஒப்பிடும்போது மிகவும் வலுவாக உணரப்படுகிறது.