பிரித்தானிய பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு திட்டம், மினி - பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.
பிரதமர் பதவிக்கான போட்டி
பிரதமர் பதவிக்கான போட்டியில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்,பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளார்.
பிரித்தானியா ஒரு சிறந்த நாடு என்றும், தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ரிஷி சுனக், அதனால் தான் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகவும் நிற்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யவும், கட்சியை ஒன்றிணைக்கவும் விரும்புவதாகவும் ரிஷி சுனக் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.