ரிஷாத்தின் மாமனாருக்கு கோவிட் தொற்று - பிணை கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் மாமனாருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்து விடுக்கப்பட்ட பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம நிராகரித்துள்ளார்.
ரிஷாத் வீட்டில் பணிபுரிந்து வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டு ரிஷாத்தின் மாமனார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைகளின் போது தொடர்ச்சியாக பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற போதும் ஒவ்வொரு முறையும் இந்த கோரிக்கையானது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டே வருகிறது.
இவ்வாறான சந்தரப்பத்தில் சந்தேகநபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி மீண்டும் பிணை கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தேகநபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாத்திரம் பிணை வழங்க முடியாதென அறிவித்து கொழும்பு மேலதிக நீதிவான் பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அத்துடன், சந்தேகநபருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



