சஜித்திற்கு ஆதரவு வெளியிட்டமை குறித்து விளக்கமளித்த ரிஷாட்
நாட்டிலே அநியாயம் செய்கின்ற,கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த,எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துள்ளனர்.இதனாலேயே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் முசலியில் நேற்று (19) மாலை இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வேட்பாளர்கள்
மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆதரவு தெரிவித்த நிலையில் முதல் முதலாக இக்கிராமத்திற்கு வருகை தந்து பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடைபெற உள்ள தேர்தலில் நாங்கள் ஏமாந்து விடாது புத்தி சாதுரியமாக எமது வாக்குகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இக்காலத்தில் நாங்கள் மிக நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது.
அவர்களில் நாங்கள் மூன்று வேட்பாளர்களை நிராகரித்து விட்டு,ஒருவரை மாத்திரம் ஏன் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்கலாம்.
சிறுபான்மை தலைவர்கள்
இந்த நாட்டிலே எதிர் காலத்தில் இனவாதம் இருக்க கூடாது என்று ஆசைப்படுகிறோம்.ஜனாஸாக்களை எரிக்கின்ற கேடு கெட்ட ஜனாதிபதி இந்த நாட்டிலே மீண்டும் வந்து விடக் கூடாது என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.
அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது என்று ஏமாந்து விடாதீர்கள்.அரசாங்கம் என்பது மக்களின் பணம்.அரசாங்கத்தில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்களோ அவர்களினால் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.
எனவே இந்த நாட்டிலே மீண்டும் ஒரு முறை இனவாதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.நான் மட்டுமல்ல சிறுபான்மை தலைவர்களும் சஜித் பிரேமதாசவுடன் கைகோர்த்துள்ளனர்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடிய சட்ட வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர்.இனவாதத்திற்கு எதிரான சமூக பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள்.கறைபடியாத உள்ளங்கள் பலர் இருக்கின்ற அணியாகவே சஜித் பிரேமதாச அணி இருக்கின்றது.
தேர்தல் முடிவு
அந்த அணியை பலப்படுத்துகின்ற கடமை தமிழர்களுக்கும்,முஸ்ஸீம்களுக்கும்,மலையக தமிழர்களுக்கும் இருக்கின்றது.இந்த மூன்று சமூகத்தின் வாக்கும் மிகவும் பெறுமதியான வாக்குகளாகவே இருக்கின்றது.
எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல் முடிவு வருகின்ற போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவார்.மன்னார் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்போம்.
எனவே அனைவரும் உங்கள் வாக்குகளை சீரழிக்காமல் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள்“ எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |