சாஹிரா கல்லூரி மாணவிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம்: றிசாட் பதியுதீன் எம்.பி உறுதி
சாஹிரா கல்லூரியில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளின் பெறுபேறுகள் கூடிய விரைவில் வெளியாக வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடில் நாடாளுமன்றிலும் வெளிநீதிமன்றம் சென்றும் பெறுபேறுகள் வெளியாகாத மாணவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன்(Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை(Trincomalee) சாஹிராக் கல்லூரிக்கு நேற்று (09.06.2024) விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவாறு கூறியுள்ளார்.
உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சாஹிராக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய 70 மாணவிகளை தவிர அதே மண்டபத்தில் அதே உடை அணிந்து பரீட்சையில் தோற்றிய வேறு பாடசாலையின் முஸ்லிம் மாணவிகள் பத்து பேருக்கு பெறுபேறுகள் வெளியாகின.
எனினும், சாஹிரா கல்லூரி மாணவிகளில் மாத்திரம் கண்வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது அநீதியாகும்.
கடந்த பத்து வருடங்களாக இந்த கல்லூரியில் மருத்துவத் துறை, பொறியியல் துறைகளுக்கு அதிகமான மாணவர்கள் தெரிவாகுவது வழக்கம் எனவே பரீட்சை பெறுபேறுகள் வெளியாக வேண்டும், இல்லாது போனால் நாடாளுமன்றிலும் வெளிநீதிமன்றம் சென்றும் நீதியை இந்த மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |