சஜித்தின் ஆட்சியில் நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்கலாம்: ரிசார்ட் பதியுதீன்
சஜித்தின் வெற்றியில் எமது நீண்ட கால பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை காணலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதுதீன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றையதினம்(25.08.2024) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தற்போது முன்னணியில் வெற்றி வேட்பாளராக காணப்படுகின்றார்.
கட்சிகளில் இருந்து தனி நபர்கள் பிரிந்து செல்வதால் பெரும் அளவிலான வாக்குகள் குறைவடைவதில்லை.கட்சியை நம்பித்தான் அதிகளவிலான வாக்களிப்பார்கள்.
தேர்தல் முடிவு நன்மையானதாகவே அமையும் என்பதுடன் ஜனாதிபதியுடன் அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் தேர்தல் முடிவில் எத்தனை இலட்சம் வாக்குகளை பெற்றார் என்பது தெரியவரும்.
தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றாலும் சிறிதளவிலான வாக்குகளே குறைவடையும். இவை ரணில் விக்ரமசிங்கவினுடைய வெற்றிக்கு காரணமாக அமையாது. ராஜபக்ச அரசாங்கம் இந்த நாட்டை வீழ்ச்சியை நோக்கி தள்ளியது.
பொருளாதார நெருக்கடியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இவ்வாறான நிலைக்கு காரணமானவர்களே இன்று ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் உள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திடம் நேர்மை இருக்கின்றது, தியாக உணர்வுடன் வேகமாக பணி செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது, சிறந்த பொருளாதார அமைப்பை கட்டமைக்க கூடிய ஒரு ஆளணி உள்ளது.
எனவே எல்லோரும் சேர்ந்து வேலை செய்கின்றபோது இந்த நாட்டை கட்டி எழுப்பலாம். வறுமையினைப் போக்கி எமது நீண்ட கால பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை காணலாம்.
சஜித் பிரேமதாசாவை வெற்றி கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.