நீதிமன்றத்தை நாட ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளது: சட்டத்தரணிகள் சங்கம்
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாட்டின் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளதோடு இந்த உரிமையை நாடாளுமன்ற (Parliament) சிறப்புரிமைகள் என்ற போர்வையில் குறைக்க முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka) தெரிவித்துள்ளது.
மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஒரு பொதுமகனால் உயர் நீதிமன்றத்தை நாடுவதை கண்டித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தகவல் வெளியிடும் போதே சட்டத்தரணிகள் சங்கம் தமது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிடும் வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் மிகுந்த கவலையுடன் பார்ப்பதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சிறப்புரிமைக் குழு
இந்நிலையில், நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது எந்த சந்தர்ப்பத்திலும் மௌனம் காக்கப்போவதில்லை.
சட்டத்தின் ஆட்சியையும் முறையான நீதி நிர்வாகத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகளை வெளியிடும் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.
அத்துடன், நாடாளுமன்றம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக ஒரு குடிமகன் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்கப்பட்ட செய்திகள் குறித்தும் சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் கருத்து சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது.
இலங்கை குடிமக்கள்
இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்காக, தனி ஆட்களை நாடாளுமன்றத்தில் பொறுப்புக்கூற வைப்பது என்பது இந்த அடிப்படை உரிமைகளை தெளிவாக மீறும் செயலாகும்.
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை ஒரு ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக்கல். எனவே நாடாளுமன்றத்தின் பழிவாங்கலுக்கு அஞ்சாமல், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் செயற்பாட்டை விமர்சிப்பவர்கள் உட்பட தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த இலங்கை குடிமக்களுக்கு (Sri lankan peoples) உரிமை உண்டு.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் நீதித்துறையின் சுதந்திரத்தை மதிக்கவும் அனைத்து தரப்பினரையும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், குடிமக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்த சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |