மாற்றுத்திறனாளிகளுக்கான இசை நிகழ்ச்சி: சர்ச்சைகளுக்கு மாவட்ட நலன்புரிச் சங்க தலைவரின் பதில்
மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஒழுங்கமைக்கப்படுவதாக கூறப்படும் இசை நிகழ்ச்சி தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்படி மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றிய செய்தி உண்மைக்கு புறம்பானது என மன்னார் மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இச்செய்தி முற்றுமுழுதும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக புனையப்பட்டு பரப்பப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் மன்னார் மாட்ட மக்களின் நலன்சார்ந்த சமூக வேலைத்திட்டகளுக்கு சில புல்லுருவிகளால் இடையூறு விளைவிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு என அமைப்பு ஒன்றினால் இசை நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக விளம்பரங்கள் அன்மைக்காலமாக வெளிவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த
நிகழ்வு தொடர்பாக பல்வேறு ஆதாரபூர்வமாக உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
குறிப்பாக மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்புக்களை சந்தித்து தாங்கள் கலந்துரையாடியதாகவும் மாவட்ட அரசாங்க அதிபருடன் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் குறித்த அமைப்பின் ஐக்கியராச்சிய தலைவர் அண்மையில் ஒரு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகம் தகவல்
இந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த மூன்று வருடங்களாக(2021,2022,2023) மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் எந்த ஒரு கலந்துரையாடலும் இடம் பெறவில்லை என மன்னார் மாவட்ட செயலகம் தகவல் வழங்கியுள்ளது.
இதன்படி மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்காக நிதி சேகரிப்பது தொடர்பில் தங்களிடம் எந்த புலம்பெயர் நாடுகளை சேர்ந்த அமைப்புக்களோ,அமைப்புகளின் தலைவர்களோ தெரிவிக்கவில்லை எனவும் குறித்த இசை நிகழ்ச்சிக்கும் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த அமைப்பினரின் இசை நிகழ்ச்சி தொடர்பிலும் அவர்களின் நிதி சேகரிப்பு தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நிதி சேகரிப்பு மோசடி
குறிப்பாக அண்மைக்காலங்களில் புலம்பெயர்நாடுகளில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை, மாவீரர் தினத்தை, மாவீரர் குடும்பங்களை, மாற்றுத்திறனாளிகளை காரணம் காட்டி பல்வேறு அமைப்புகள் நிதி சேகரித்து மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் குறித்த அமைப்பிடம் விளக்கம் கோரிய நிலையில் எந்த ஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சி தொடர்பிலும் குறித்த நிகழ்ச்சியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் நபர் தொடர்பிலும் பல்வேறு தகவல் கோரிக்கைகள் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் குறித்த கேள்விகளுக்கான பதில்களை வழங்குவதை தாமதித்து வருவதுடன் அவருக்கும் குறித்த அமைப்பின் செயற்பாடுகளில் தொடர்பு இருக்கிறதா? என்பது தொடர்பில் மக்கள் தரப்பில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.