இரத்தினபுரியில் தமிழ் எம்.பியை பெறுவது எமது உரிமை : மனோ கணேசன் ஆதங்கம்
இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட கட்டமைப்பு மாநாடு இரத்தினபுரி நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வாக்குகள்
மேலும் தெரிவிக்கையில், “ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் அமைச்சர் பதவியை பெறுவது எமது உரிமை. அது ஒரு சலுகை அல்ல.
எனவே அடுத்த முறை எங்கள் வேட்பாளர் சந்திர குமார் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பியாக வெற்றி பெற்று வருவார்.
இப்படி எமது கடும் உழைப்பினால் தமிழ் பிரதிநிதித்துவங்களை நமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது தமிழ் வாக்குகளை சிதறடிக்க இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள். துரோகிகளான இவர்கள் தலைகளில் இடிதான் விழ வேண்டும்.
இந்நிலையில் மழை, வெள்ளத்துக்கு இடையிலும், இங்கே பெருந்தொகையில் கூடி இருக்கும் நீங்கள் இம்மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளில், அனைத்து தோட்ட பிரிவுகளில், அனைத்து நகர பிரிவுகளில் அமைந்துள்ள எங்கள் அமைப்பாளர்களின் தலைமையிலான கட்சி வலை பின்னல் செயற்குழு உறுப்பினர்கள்.
உங்கள் பெயர் பட்டியல் என்னிடம் இருக்கிறது. இது ஜனநாயக மக்கள் முன்னணியின் மாவட்டம் தழுவிய கட்டமைப்பு மாநாடு. இதுதான் எங்கள் அறிவார்ந்த அரசியல் பாணி" என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |