அத்தியாவசிய பொருளொன்றின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்
அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலையானது அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு கிலோகிராம் அரிசிக்கு நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதின் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரிசி விலை அதிகரிப்பு
இதன் காரணமாக அரிசியின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசிக்கு விலையினை அதிகரிக்காது விற்பனை செய்யப்பட வேண்டுமாயின் நெல்லினை குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய வேண்டும்.
நாட்டில் மக்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் காணப்படுகையில் அரசாங்கம் சர்வதேசத்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது.
அத்துடன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் இரண்டு இலட்சம் மெட்றிக் தொன் அரிசியினை அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளனர்.
அரிசி இறக்குமதி
இதேவேளை இரசாயன உரம் பயன்படுத்தப்படாமையினால் அறுவரை குறைவடைந்துள்ளது. அதனால் அரிசியை இறக்குமதி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அறுவடையானது குறைவடைந்தமையினால் அரிசி இறக்குமதியானது மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தரகு பணம் (கமிசன்) குறைவடைந்துள்ளமையினாலேயே இறக்குமதி செய்யப்படுகிறது.
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் மோசடியும் அதனை எதிர்த்து கேள்வி எழுப்புவதற்கு விவசாய திணைக்கள அதிகாரிகளிடம் காணப்படும் இயலாமையுமே அரிசியின் விலை அதிகரிப்பிற்கு காரணமாகும்.
வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதனால் 700 இற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.