அரச வரிகளை அறவிடும் முறைமையில் பிரச்சினை! வரிக் கொள்கை மாற்றியமைக்கப்படலாம்
இந்த நாட்டில் அரச வரிகளை அறவிடும் முறைமையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது, எனவே நாட்டின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இறைவரிச் சட்டத்தை விரைவில் திருத்த நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச வரிப் பொறிமுறையை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை விரைவில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒரு சில அதிகாரிகள் தமது கடமைகளை சரியாகச் செய்வதில்லை. அவர்கள் தொடர்பில் இந்த புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூலம் கடுமையான தீர்மானங்களை எடுக்க முடியும்.
இந்த நாட்டில் அரச வரிகளை அறவிடும் முறைமையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது, எனவே நாட்டின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 08 பில்லியன் ரூபா செலவில் கணனித் தரவுக் கட்டமைப்பு ஒன்றை தயாரித்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாகியும் இந்தக் கட்டமைப்பை செயல்படுத்த அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தத் தரவுக் கட்டமைப்பில் 42 நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தரவுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தினால் அவர்கள் விரும்பியபடி செயல்பட முடியாது. அதனால்தான் டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக அரச பொறிமுறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து இவ்வாறு நிகழும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான பணிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.