ஓய்வூதிய வயதெல்லை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் தொடர்பான முன்மொழிவு
நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையில் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை குறைப்பது தொடர்பில் முன்மொழிவொன்றை நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்தார்.
முன்னதாக குறித்த வயதெல்லை 65ஆக அதிகரிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், ஓய்வூதிய வயதெல்லையில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரச துறையில் ஏற்பட்டுள்ள தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு
இந்த நிலையில் பொது நிர்வாக அமைச்சால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்ட போதிலும், திருத்தப்பட்ட சேவைகளுக்கு அது பொருந்தாது.
இது தொடர்பில், அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை வெளியிடப்படும். கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதிய அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 65ஆக அதிகரிக்கப்பட்டது.
அதற்கு முன்னர், சேவை அவசியத்தன்மை அடிப்படையில், சில விசேட சேவைகளுக்கு, கட்டாய ஓய்வு வயதெல்லை, ஓய்வூதிய யாப்பில் நிர்ணயிக்கப்பட்ட, கட்டாய ஓய்வு வயதெல்லை 60 வயதை விடவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
புதிய இடைக்கால வரவு செலவு திட்டத்தில், அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக திருத்தப்பட்டது.
அது, அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை, 65 ஆக நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னர், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாதவாறு நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.