உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் பொலிஸ் மா அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கையின் அரச புலனாய்வு சேவைகள் மற்றும் இராணுவ புலனாய்வு இயக்குநரகம் என்பன பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரை, தவறாக வழிநடத்தாமல் துல்லியமான தகவல்களை வழங்கியிருந்தால், தானும் தனது மூத்த அதிகாரிகளும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தவிர்த்திருக்கலாம் என்று குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன (Ravi Senaviratne) தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை நேர்காணல் ஒன்றின் போதே பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன வெளிப்படுத்தியுள்ளார்.
2019ஆம் ஆண்டு நவம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தனது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால் தமது குழு விசாரணைகளை முடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க முடியும் என்றும் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரை
குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றவுடன் சிரேஸ்ட அதிகாரியான சானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டார் என செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை அனைத்து உயர்மட்ட விசாரணைகளையும் முடக்கியதுடன் இடமாற்றத்திற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை.
செனவிரத்னவின் கூற்றுப்படி, புதிய அரசாங்கத்தில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கு முன்பே இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டன.
பொதுவாக ஒரு புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்கும் போது பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சுச் செயலாளர்களை நியமிப்பதே அவரது முதல் கடமையாகும்.
ஏனைய நியமனங்கள் பின்னரே செய்யப்படும். ஆனால் கோட்டாபய ராஜபக்ச தனது கடமைகளை பொறுப்பேற்றதும், அவரது முதல் உத்தியோகபூர்வ கடமையாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகரவை பதவி இறக்கம் செய்தார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் கீழ், குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளராக மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆளணி பாதுகாப்பு அதிகாரி டபிள்யூ. திலகரத்ன நியமிக்கப்பட்டார்.
குடிவரவுச் சட்டங்கள்
இவர், உயர்மட்ட அனைத்து விசாரணைகளிலும் நேரடியாக ஈடுபட்ட குற்றப்புலனாய்வுத் துறையின் சுமார் 704 அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்தார்.
இந்த தடை இன்னும் நடைமுறையில் உள்ளது. இது நாட்டின் குடிவரவுச் சட்டங்களை முற்றிலும் மீறுவதாகும் என்று ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2008ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதியன்று மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் தர அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரச புலனாய்வு சேவைகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் தரப்பால் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தவறாக வழிநடத்தப்பட்டனர்
இதுவே பின்னர் சஹ்ரானின் தாக்குதல்களுக்கான திருப்புமுனையாக இருந்தது. செனவிரத்னவின் கூற்றுப்படி, அரச புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கொலைகளுக்காக முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தி வந்தனர்.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை குழப்பியதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி அஜந்தனால் இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவப்புலனாய்வு பிரிவினர் முடிவுக்கு வந்திருந்தனர்.
இந்த சம்வத்தின்போது அஜந்தன் அணிந்திருந்ததாக கூறப்படும் மேலாடை (ஜெக்கட்) ஒன்றும் காட்டப்பட்டது.
பொலிஸாரின் விசாரணைக் குழு
இதனையடுத்து மோப்ப நாய்கள் அஜந்தனின் வீட்டிற்குச் சென்றபோது, அவரது வயதான மாமியார் மற்றும் அவரது இரண்டு சிறு குழந்தைகளும் வீட்டில் இருந்தனர்.
மேலும் அவரது இரண்டு குழந்தைகளும் அது தங்கள் தந்தையுடையது என்றும் முதல் நாள் இரவு அது அவரது படுக்கைக்கு அடியில் இருந்ததாகவும் கூறினர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தக் கொலையில் அஜந்தனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதும் பொலிஸாரின் விசாரணைக் குழுவை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த தவறான தகவல்கள் புனையப்பட்டன என்பது தெரியவந்ததாக ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் உண்மையான குற்றவாளிகளை மறைக்க அரச புலனாய்வுத்துறையினரும், இராணுவ புலனாய்வுத்துறையினரும் வேண்டுமென்றே தங்களை தவறாக வழிநடத்தியது என்பதை தாம் உணர்ந்து கொள்ளும் நேரத்தில் அது மிகவும் தாமதமாகிவிட்டது என்று செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட சர்வானந்தா என்ற போராளியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ரவி செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்
இதனால் குற்றப்புலனாய்வுத்துறையின் விசாரணை முஸ்லிம் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் பக்கம் திரும்புவது தடுக்கப்பட்டது.
அதேபோன்று மாவனல்லையில் பௌத்த விகாரைகள் மீதான தாக்குதல்களின் போதும் பொலிஸார் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, அரச புலனாய்வுப்பிரிவினர் சரியான தகவல்களை வழங்கியிருந்தால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை எளிதாக தடுத்து உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் பயங்கரவாதப் புலனாய்வுத் துறைக்கு புதிய இயக்குநராக ஜே.பி.டி. ஜெயசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர், அவரிடம் இருந்து கிடைத்த தகவலே, இந்த தாக்குதல்களின் பின்னணிகள், அரச புலனாய்வுத்துறை மற்றும் இராணுவ புலனாய்வுத்துறை ஆகியவற்றினால் மறைக்கப்பட்டு, பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையினர் தவறாக வழி நடத்தப்பட்டமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது என்றும் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் ஏப்ரல் 21ஆம் திகதி மதியம் குண்டு வெடிக்க வைத்த ஜெமீலின் வீட்டுக்கு இராணுவப்புலனாய்வுத்துறையினரும் அரசப் புலனாய்வுத்துறையினரும் சென்ற முக்கிய தகவலையே பயங்கரவாதப் புலனாய்வுத் துறைக்கு புதிய இயக்குநராக ஜே.பி.டி. ஜெயசிங்க தம்முடன் பகிர்ந்ததாக பொலிஸ் அதிகாரி ரவி செனவிரட்ன நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |